6.21.2010

காதலர்கள் கொலை அதிகரிப்பு : தடுக்க முடியாத மாநில அரசுகள்

இந்தியாவில் காதல் கொண்ட நெஞ்சங்கள் குற்றம் புரிந்ததாக, உறவுக்காரர்கள் கொலை செய்யும் எண்ணம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இதனை தடுப்பதில் என்ன சிரமம், ஏன் இது போன்ற சம்பவம் நடக்கிறது, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் அரியானா பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கிராமத்தினர் கண்எதிரே கொடூரம் : சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நிமிரிவாலி அருகே பிவானி என்ற கிராமத்தில் காதல் செய்தற்காக காதலன் , காதலிகள் பஞ்சாயத்து மூலம் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் .அரியானாவில் நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மோனிகா ( 18 ), ரிங்கு (19), மனம்ஒத்து காதல் செய்திருக்கின்றனர். இதனைக்கேள்விப்பட்ட மோனிகாவின் தந்தை, சகோதரன், மாமன், சேர்ந்து காதலன், காதலியை கொடுமைப்படுத்தினர். பின்னர் இருவரையும் அடித்தே கொன்றிருக்கின்றனர். காதலனை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இது இந்த கிராம மக்கள் சிலர் பார்க்கும் அளவிற்கு அவர்கள் முன்னிலையில் கொன்றிருக்கின்றனர். யாராவது காதலித்தால் இவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் என கிராமத்தினரை எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலன் ரிங்குவின் மாமனார் கிருஷ்ண குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பிரேம்சிங் தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில்; இருவரது உடல்களிலும் உள்ள காயத்தின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் . இன்னும் பிரேத பரிசோதனை வந்த பின்னர் முழு விவரம் தெரிந்து விடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்றார்.

இது போன்று பஞ்சாப், அரியானா, மேற்குவங்கம் . ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காதல் கொடுமை சம்பவம் நடந்துள்ளதாகவும் , இது போன்ற கொடூரச்செயல்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சக்திவாஹினி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தொடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காதலன், காதலிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைள் குறித்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

0 comments:

Post a Comment