6.25.2010

சிரிக்க வைத்த கார்த்தி!

சூர்யாவிடம் இல்லாத பல விஷயங்கள் இருக்கிறது அவரது இளவல் கார்த்தியிடம்! பொய்யில்லாத சிரிப்பு, புரட்டில்லாத பேச்சு என்று அந்த 'வெரிகுட் விஷயங்களை' அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேற்று நடந்த 'நான் மகான் அல்ல' பிரஸ்மீட்டில் கூட கார்த்தியின் இயல்பான பேச்சில் ஒரு சினேகிதனின் மென்மை!

'மௌன ராகம் படத்தில் கார்த்திக் சார் பண்ணியது மாதிரி ஒரு கேரக்டர் இது என்று பெரும்பாலான இயக்குனர்கள் சொல்லுவாங்க. ஆனால் அந்த இடத்தை இதுவரைக்கும் யாரும் நிரப்பியதா தெரியல. இந்த படத்தில் நீங்க அந்த மௌன ராகம் கார்த்திக்கை பார்க்கலாம். இன்னம் 25 வருஷம் கழிச்சு அவரு தான் நடிச்ச படங்களை திரும்ப நினைச்சு பார்த்தார்னா அதில கட்டாயம் இந்த படமும் இருக்கும்' என்று பெரிய முன்னோட்டம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் நான் மகான் அல்ல படத்தின் இயக்குனர் சுசீந்திரன். இவர் சொன்ன இன்னொரு தகவல் ரொம்ப முக்கியமானது. 'பருத்தி வீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவனிலும், பையாவிலும் கொஞ்சமாவது பருத்தி வீரன் சாயல் இருக்கும்னு சொல்வாங்க. இந்த படத்தில் அந்த சுவடே சுத்தமா இருக்காது. ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கார்' என்றார்.

தனது அழகான மென் சிரிப்போடு பேச ஆரம்பித்தார் கார்த்தி. பருத்தி வீரன்ல 90 சதவீதம் அமீர் சார் இருந்தார்னா, அதில பத்து சதவீதமாவது நான் இருந்திருக்க மாட்டேனா? எனக்குன்னு இருக்கிற குணமும் அதில வெளிப்பட்டிருக்கும் இல்லையா? அதுதான் அடுத்தடுத்த படத்தில் வருதுன்னு நினைக்கிறேன். ஆனால் நான் மகான் அல்ல படத்தில் டோட்டலா வேறு மாதிரி கார்த்தியை பார்க்கலாம். வெண்ணிலா கபடிக்குழு பார்த்தவுடன் நான் பிரமிச்சு போனேன். அந்த படத்தில் நிறைய சைலண்ட் ஷாட்ஸ் இருந்திச்சு. சைலண்ட்டை திரையில் ரசிக்கிற மாதிரி சொல்றது ரொம்ப கஷ்டம். அதை சரியா செஞ்சிருந்தாரு சுசீந்திரன். நாங்க கூப்பிட்டு கதையை கேட்டோம். முதல் ஆஃப் சொல்லும்போதே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வச்சார். இந்த படம் ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றவரிடம், நான் மகான் அல்ல என்று பேரு வச்சிருக்கீங்க. ஏதும் வில்லங்கமான சீன் இருக்கா என்றொரு கேள்வி பறந்தது கூட்டத்திலிருந்து.

நான் மகான் அல்லன்னுதானே சார் வச்சுருக்கோம். நான் மன்மதன் அல்லன்னு வைக்கலையே என்றார் கார்த்தி. பின்னாலேயே பறந்து வந்த இன்னொரு கேள்வி அந்த அரங்கத்தையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

இப்பல்லாம் மகான்கள்தானே மன்மதன்கள் ஆகுறாங்க

1 comments:

  1. நல்லாஇருக்கு நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete