7.01.2010

வரலாறு படைத்த செம்மொழி மாநாடு!

திசையெங்கும் மக்கள் கூட்டம்! திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்! தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்க, செம்மொழிச் சிகரத்தில் அமரவைத்த தமிழ்தாய்க்கு புகழ் மகுடம் சூட்ட கொங்கு மண்டலம் கோவையில் தமிழர்கள் கூடிய 5 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழர்களின் நூற்றாண்டுக் கனவாக இருந்த செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்த தமிழக முதலமைச்சர், அதை அதிகார பூர்வமாக அறிவித்த இந்தியப் பேரரசின் ஆட்சியாளர்கள், அதற்குப் பெரிதும் துணை நின்ற சோனியா காந்தி ஆகியோருக்கு தமிழர்கள் நன்றி கூறும் விழாவாக, உலக அரங்கில் தமிழின் மேன்மையை அதன் தொன்மையை, செழுமையை, சிறப்பை வெளிப்படுத்தும் சீர்மிகு விழாவாகவும் இம்மாநாடு சிறப்புற நடைபெற்றது.

உலகத் தமிழச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும் கோவை மாநகரின் "கொடிசியா' வளாகத்திலும் அதன் அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலிலும் இந்த தமிழ்த் திருவிழா நடைபெற்றது.

மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கண்காட்சி இணைய தளக்கண்காட்சி, புத்தக் கண்காட்சி ஆகியவை மக்களை வெகுவாக ஈர்த்தது. தினமும் சுமார் 50 ஆயிரம் மக்கள், குடும்பம், குடும்பமாக வந்து கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.
மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இசை நிகழ்ச்சி, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டி மன்றம், சிறப்புக் கருத்தரங்கம், நாட்டிய நாடகம் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பந்தல் நிறைய பல்லாயிரக்கணக்கானோர் வந்து அமர்ந்து கண்டு, கேட்டு களிப்புற்றதைக் காண முடிந்தது.
கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 முகப்பரங்குகள், 23 ஆய்வரங்குகளில் நான்கு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஆயிரக்ணக்கான தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும், நோக்கர்களும், வெளிநாட்டுப் பேராளர்களும் வருகை தந்து சிறப்பித்தது செம்மொழி மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்த்தது.

மாநாடு நடைபெற்ற 5 நாட்களும், ஏறத்தாழ எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருந்து பெருமை சேர்த்ததை பலரும் பராட்டினார்கள்.

இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், குறிப்பாக கனிமொழி எம்.பி. உள்ளிட்ட மாநாட்டுக்குழுவின் நிர்வாகிகள் ஆங்காங்கே சுற்றிச் சுழன்று மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்ததையும், மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதையும் காண முடிந்தது.
கண்காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் அலை மோதுவதைக் கண்ட முதல்வர், இக்கண்காட்சியை மாநாடு முடிந்த பின்னரும் ஜூலை 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இது கோவை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இக்கண்காட்சி குறித்து கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சங்கீதா கூறுகையில், இக்கண்காட்சியைக்காண சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் நின்று வந்தேன், ஒரு கட்டத்தில் வரிசையை விட்டு வெளியே சென்று விடுவோமா, என்று கூட யோசித்தேன் ஆனால், உள்ளே வந்து இணையதளக் கண்காட்சியையும், பொதுக் கண்காட்சியையும் பார்த்த போது, வாழ்நாளில் கிடைக்க முடியாத ஒரு அரிய பொக்கிஷத்தை, தமிழர்களின் வரலாற்று ஆவணங்களான, தமிழின் சிறப்பை உணர்த்தும் இக்கண்காட்சியை காணும் அரிய வாய்ப்பை தவறவிட இருந்தோமே என்று எண்ணினேன். இதுபோன்ற நிரந்தரக் கண்காட்சி கோவையில் இடம் பெற வேண்டும் என்பதே என்விருப்பம் என்றார்.

இதே கருத்தை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலும் வெளிப்படுத்தினர். ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவ, மாணவியரும், பொதுமக்களும் தங்களிடம் உள்ள செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் கண்காட்சி அரங்குகளை படம் பிடித்துச் சென்றதைக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில், தமிழக அரசின் செய்தித் துறையின் பங்களிப்பும், பணியும் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 600க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்வது, மாநாட்டு நிகழ்வுகள், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் பேச்சுக்களின் தமிழ், ஆங்கில பிரதிகளை உடனுக்குடன் விநியோகிப்பது, பத்திரிகையாளர்களை, தங்குமிடத்தில் இருந்து மாநாட்டு அரங்கிற்கு அழைத்து வருவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்தித் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் திறம்படச் செய்தனர்.

அருமையான தங்கும் இட வசதி, அற்புதமான விருந்தோம்பல், எந்த நேரத்தில் என்ன விளக்கம், தகவல் கேட்டாலும் முகம் சுளிக்காமல் நட்புணர்வுடன் பதிலளிப்பது என்று மிகுந்த பாங்குடனும், நேர்த்தியுடனும் செய்தித் துறையினர் செயல்பட்டது பாராட்டத்தக்கது.

செம்மொழி மாநாட்டின் சிறப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன், இத்துறையின் கவுரவப் பேராசிரியர் டாக்டர். ஏ.சந்திரசேகரன், தொல்லியில் துறைப் பேராசிரியர் பாலாஜி, வேலூர் மேல்விசாரம் பகுதியிலுள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஒன்ன மாறனன் ஆகியோர், தமிழால் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து இந்தச் மாநாடு மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மொழி தொடர்பான மாநாடு, கூட்டங்கள் என்றால், அதிகபட்சம் இரண்டாயிரம் பேர் தான் கூடுவார்கள், இங்கு ஆய்வாளர்கள், கட்டுரையாளர்களே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

பொது அரங்க மாநாட்டிலும், கண்காட்சியை காணவும் லட்சக் கணக்கில் மக்கள் ஆர்வத்துடன் வருவது சிறப்பாக உள்ளது என்று கூறினார்கள்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது போல ஒன்றே குலம், ஒரே மொழி தமிழ் என மக்கள் ஜாதி, மத, இனம் கடந்து வந்திருப்பதும், 50 நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் வந்து பங்கேற்றிருப்பதும் பெருமைக்குரியது என்று கூறிய அவர்கள், இனி பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போல செம்மொழி விழா கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றனர்.

"வரலாறு மீட்டுருவாக்கத்தில் நாட்டுப்புறப் பாட்ல்கள் மற்றும் கதைப் பாடல்களின் பங்களிப்பு' என்ற கட்டுரையையும் பேராசிரியர் வெங்கட்ராமன் தாக்கல் செய்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்தி வரும் இளங்கோ மெய்யப்பன் மாநாட்டின் பிரமாண்டத்தை, மக்களின் எழுச்சியைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தார். கலிபோர்னியாவிலுள்ள 28 பள்ளிக் கூடங்களை சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்து அங்கு தமிழ் சொல்லித் தருவதாகவும் அவர் கூறினார். பல்வேறு நாட்டு மக்களும் ஆர்வத்துடன் வந்து தமிழ் கற்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும், தமிழ் கற்பதற்கு உரிய "கால் சென்டர்'களை இயக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெனிசில்வேனியா நாட்டின் ஆய்வாளர் எரிக்மில்லர், கண்ணகி மேல் ஆர்வம் கொண்டு அவரது வரலாற்றை ஆய்வு செய்து வருவதாகவும், அவர் வாழ்ந்த பகுதி முழுவதும் சென்று அங்குள்ள மக்கள் சொல்லும் கண்ணகி தொடர்பான கதைகளை, அவர்களின் வாய்மொழிச்சொல் மூலமே ஆவணப்படமாக எடுத்திருப்பதாகவும் கூறினார். செம்மொழி மாநாடு தமிழை உலகஅளவில் ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார். தமிழ் மொழி கற்பித்தல் அனைத்தும் செயல்வழி மூலமாகவே அமைய வேண்டும், வெறும் புத்தகப் படிப்பு பயன்தராது என்றும் கருத்துத் தெரிவித்தார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்வாளர் முனியப்பன், இணையத்தில் தமிழ் அகராதி மிகமிக குறைவாக இருப்பதாகவும், அதற்குரிய மின் அகராதிகளை அதிகம் உருவாக்க வேண்டும் என்றார். முதலமைச்சரின் 87 வயதைக் குறிக்கும் வகையில் 87 தமிழ் எழுத்தாளர்கள் வருகை தந்து மாநாட்டில் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மொழிக்கு என சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறிய இங்கு பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு புதிய வரலாறு படைத்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார்.
இப்படி தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று எல்லா தரப்பு மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வரலாறு படைத்ததுடன் தமிழுக்கும், தமிழர்களுக்கும், குறிப்பாக தமிழக முதல்வருக்கும் பெருமை சேர்த்துள்ளது.

2 comments:

  1. The Tamil conference was really very good. I took my kids (American born) to the conference and they have enjoyed and singing the theme song always. I have not seen any conference like this kind in my life. Here only I saw the huge "Pandhal" what i have never seen before ... it was amazing!!!! What a wonderful entrance !!!!

    Awesome !!!!!!

    Iniyavai-40 is very much impressive !!!!

    Kudos to the organizers !!! Very well organized except the traffic control !!!

    ReplyDelete