6.22.2010

செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு எப்படிக் கிடைத்தது!

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழுக்கு நல்ல செறிவான தொன்மையான இலக்கியமும், இலக்கண பாரம்பரியமும், தனக்கென தனி எழுத்து கட்டமைப்பும், எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த செழுமையான வளர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. தமிழ்நாட்டில் முதன்மையாகவும், மற்ற நாடுகளிலும் தொடர்ந்து கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் பேசப்பட்டு வளர்ந்து வருகிறது. தமிழ் மொழி இக்காலத்திற்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டாலும், அதன் தொன்மைத் தன்மையும், மொழி அம்சங்களும் மாறாமல் கட்டிக் காக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் நிர்வாகம் வேறு மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு சிறப்பான உதவிகளைச் செய்து வந்தது. இதன் அடிப்படையில் தூண்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்தும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்கப்பட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களும் இந்த வேண்டுகோளினை ஆய்வுப் பூர்வமான ஆதாரத்துடன் பரிந்துரைத்து கேட்டு வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்னும் தமிழ் அறிஞராவார். 2000 ஆம் ஆண்டில் இது குறித்து எழுதியபோது, அப்போது செம்மொழிகள் என உலகம் எங்கும் பேசப்பட்டு வந்த பெர்சியன், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம் மற்றும் அரபி மொழிகளுக்கு ஈடாகவும் இணையாகவும் தொன்மையையும், இலக்கண இலக்கியத்தையும் தமிழ் கொண்டிருப்பதனாலேயே, இதற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்தினார்.

இவருக்கு முன் இதே கருத்தினை கால்டுவெல் (1814-1891) பரிதிமாற் கலைஞர் வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இயக்கமாக சைவ சித்தாந்த சமாஜம் 1918ல் இந்த கோரிக்கையை வைத்தது. பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கரந்தை தமிழ்ச் சங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இதே வேண்டுகோளை வைத்தது.
பின்னர் 1996 ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டுமென்று கேட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. இதுவே 1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்தது. விழுப்புரத்தில் பின்னர் 2004ல் நடந்த மாநாட்டிலும் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

பின் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியாய் இருந்த தமிழர் அப்துல் கலாம், தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்தார். 2004 செப்டம்பரில், செம்மொழி அந்தஸ்து ஒரு மொழிக்கு வழங்கத் தேவையான அம்சங்களை மத்திய அரசின் குழு வரையறை செய்தது. பின் 2004 அக்டோபர் 12ல் இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. சுதந்திர, இந்திய மக்கள் அரசில் முதல் செம்மொழி அறிவிப்பு பெற்ற மொழி தமிழ் மொழியே. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களால் வேண்டப்பட்ட ஒரு கனவு இதன் மூலம் நிறைவேறியது.

கிரேக்கம், லத்தின் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் மக்களால் பேசப்பட்டு உயிருடன் வாழும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி தமிழ் மொழி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

 1. உபயோகமான தகவல்கள். நன்றி

  ReplyDelete
 2. தகவல்களுக்கு நன்றி.
  ஒரு சின்ன ஐயம்: ஒரு மொழியை செம்மொழி என பன்னாட்டு மொழி பல்கலைக்கழகம் (அப்படி எதாவது பல்கலைக்கழகம் இருக்கிறதா?) அறிவிப்பது வழக்கம் உண்டா?
  இத்தகைய மைய அரசு அறிவிப்பது எந்த அளவுக்கு பன்மொழி அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் படும்? தவிர, நம் நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்கள் இதை எந்த அளவுக்கு அறிந்துவைத்திருக்கின்றனர்
  http://makaranthapezhai.blogspot.com

  ReplyDelete