6.22.2010

இலங்கையின் போர்க்குற்றங்களை ஆராய பான் கீ மூன் "நிபுணர் குழு" நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மார்டின் நெசிர்சி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்தோனியாவின் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக்குழுவில், தென்னாபிரிக்காவின் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கையின் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பில், ஆராயவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு, அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படவேண்டுமென்ற நோக்கில், பான் கீ மூனின் இந்த நிபுணர் குழு தமது பங்களிப்பை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தகுழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது என தெரிவித்துள்ள பேச்சாளர், செயலாளருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை இதற்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

தமது அறிக்கையின் எந்த விடயங்களை பொதுமக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக்குழுவே தீர்மானிக்கும் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. இந்தநிலையில் இலங்கைக்கும் விஜயம் செய்யும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment