6.22.2010

7 விக்கெட்டில் இலங்கை வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்றில் வங்கதேசம் (3 தோல்வி), பாகிஸ்தான் (2 தோல்வி) அணிகள் தோற்று வெளியேறிய நிலையில் தலா 2 வெற்றியுடன் சமநிலை வகித்த இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்குத் தகுதி பெற்றன.

இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்தியா & இலங்கை அணிகளிடையே சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. கம்பீர் 23, கோஹ்லி 10, கார்த்திக் 40, ரெய்னா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் & கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. டோனி 41 ரன் எடுத்த நிலையில் 38வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.அடுத்த ஓவரைத் தொடங்கிய மகரூப் தொடர்ச்சியாக முதல் 3 பந்துகளில் ஜடேஜா, பிரவீன், ஜாகீர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா, மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காமல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் 69 ரன் எடுத்து ரன் அவுட் ஆக, இந்தியா 42.3 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை பந்துவீச்சில் மகரூப் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை 37.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்து வென்றது. தரங்கா 38, தில்ஷன் 24, சங்கக்கரா 73 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெயவர்தனே 53, கந்தாம்பி 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

0 comments:

Post a Comment