6.28.2010

ரஞ்சிதா வீடியோ பற்றி நித்தியானந்தா புது பேட்டி!

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ‌‌‌தொடர்பாக நித்தியானந்தா கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

இந்நிலையில் நித்தியானந்தா அளித்துள்ள பேட்டியில், ரஞ்சிதா வீடியோவால் தனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் எனது ஆன்மிக பயணத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் உண்மை எப்போதுமே உண்மையாகவே இருக்கும். நான் பெண்களிடம் தவறாக நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் எனது ஆசிரமத்தில் 8 வயது முதல் 80 வயது வரை உள்ள பெண்கள் சீடர்களாக உள்ளனர். நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 23 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் எனது ஆசிரமத்தில் உள்ள பெண்களிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் ஒரு பெண் கூட எனக்கு எதிராக இதுவரை புகார் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெற்றுச்செல்கிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதற்கு நான் அவசரம் காட்ட மாட்டேன். 3 மாதங்களுக்கு பிறகு பக்தர்களும், பொதுமக்களும் என்னைப்பற்றிய உண்மைகளை புரிந்து கொள்வார்கள். அதன்பிறகு அவர்கள் கேள்விகள் அனைத்துக்கும் தானாகவே விடை கிடைத்து விடும். இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் அமைதி மற்றும் சமாதானத்தை நோக்கி செல்ல வேண்டும். அமைதியான உலகத்தை தேடி நாம் அனைவரும் செல்ல வேண்டும். நாமும் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். நான் சில குறிக்கோள்களை கொண்டிருக்கிறேன். உலகம் முழுவதும் யோகா மற்றும் தியானம் மூலமாக அமைதியான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இப்போதுள்ள நிலையில் எனது கவலை எல்லாம் ஆசிரமத்தில் உள்ளவர்கள், பக்தர்கள், தேவைகளை எதிர்நோக்கி இருப்பவர்களை பற்றியே உள்ளது. அவர்கள் மிகவும் வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவையும் மதிக்கிறேன். எனக்கு உண்மை மீது அசையாத நம்பிக்கை உண்டு. அதே போல நீதியின் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. வாய்மையே வெல்லும். சூரியனை மேகங்களால் மறைக்கக்கூடும். ஆனால் சூரியனை மேகங்களால் சேதப்படுத்த முடியாது, என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment