6.28.2010

சீனாவின செல்வாக்கு இலங்கையில் காணப்பட்டாலும் இந்தியா அச்சம் கொள்ளத் தேவை இல்லை -மஹிந்த

இலங்கையில் காணப்படுகின்ற சீன செல்வாக்கு குறித்து, இந்தியா அச்சமடைய வேண்டிய தில்லை என "ரைம்ஸ் ஒப் இந்தியா" இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


சீனாவின செல்வாக்கு இலங்கையில் காணப்பட்டாலும் அது குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடாக இருப்பினும், அவற்றுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, வர்த்த ரீதியானதாகவே இருக்கும் எனினும் இந்தியாவுடனான உறவு நிரந்தரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கைக்கு வந்து சில வேலைத்திட்டங்களை முடித்த பின்னர் சீனா சென்று விடும். எனினும் இந்தியா வேலைத்திட்டங்களை நிறைவு செய்த பின்னரும் இலங்கையில் நிரந்தரமாக தங்கி இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், 2500 வருடங்கள் பழமையான இலங்கை இந்திய உறவை, யாராலும் விரிசல் படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், ஏனைய நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளையும் அதற்காக முறித்துக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அம்பாந்தோட்டையில் இந்திய துணை உயர்ஸ்தானிகரகம் ஒன்று திறக்கப்படுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை இலங்கையின் மிகப்பெரிய நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா மாத்திரம் இன்றி, அனைத்து நாடுகளினும் ராஜதந்திர காரியாலங்களை அங்கு திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சீபா உடன்படிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அது இலங்கைக்கு சாதகமானது எனவும், இதனை காலம் தாழ்த்தும் எண்ணமில்லை எனவும் குறிப்பிட்ட அவர், எனினும் தமது நாட்டின் அபிப்பிராயம் குறித்து முதலில் பார்க்கவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்வேறு நாடுகள் பல முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், இலங்கைக்கு என சுயாதீனமான பாதை ஒன்று உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துரதிஸ்ட்ட வசமாக கடந்த காலங்களில் இலங்கையில் காணப்பட்ட வெளிநாட்டு கொள்கைகள் பிழையானதாக அமைந்தது. எனினும் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிழையான கொள்கைகள் பின்பற்றப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையில் மோதல் நிறைவடைந்ததன் பின்னர், அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகளில் மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இதே அளவில் இந்தியாவும் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கடந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தின் போது, இலங்கையை சீனாவுக்கு விற்றுவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தமையை அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இதே குற்றச்சாட்டுத்தான் தற்போது தமது அரசாங்கத்தின மீதும் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment