7.03.2010

தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை 10 நாட்களில் சட்ட முன்வடிவு

தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்டநிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் 10 நாட்களுக்குள் சட்ட முன்வடிவை தயாரிப்பதென்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது.

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை நிறைவேற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன் உள்பட மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, தொல்லியல் துறை ஆணையர், தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காகவும், செம்மொழி தமிழாய்வு நூலகத்தை கோட்டையில் பழைய சட்டசபை வளாகத்தில் தொடங்கி வைத்ததற்காக வும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிதியமைச்சர் அன்பழகன் முன்மொழிந்தார். அதை அனைவரும் வரவேற்றனர். பின்னர், மாநாட்டு தீர்மானங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்க இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் அது பற்றிய விவரங்களை முதல்வருக்கு தாக்கல் செய்வதாக வேளாண்மைத் துறை செயலர் கூறினார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியிருப்பதாகவும், அடுத்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து அதன் மீது விவாதம் நடத்த கோரலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006ம் ஆண்டில் அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றி விவாதிக்கப்பட்டு மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை வலி யுறுத்த முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தின் ஆட்சிமொழியாக நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட தலை மைச் செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் கொண்டு வருவது பற்றி, சட்டநிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் 10 நாட்களுக்குள் சட்ட முன்வடிவை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதனை உருவாக்கியவருக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருதும், பாராட்டுச்சான்றிதழும் வழங்குவதை ஆண்டுதோறும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி அடுத்த கல்வியாண்டு முதல் இடம்பெறுவதற்கு ஆவன செய்ய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆலோசனைகளையும் பெற தீர்மானிக்கப்பட்டது.

மதுரை மாநகரில் தொடங்கவுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தின் பொறுப்புகள் குறித்த தீர்மானம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அடுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எப்படி, எங்கு நடத்துவது என்ற திட்டங்களையும், திராவிடர்மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்தல், ஆவணக் காப்பகம் உருவாக்கி பராமரித்தல், தனித்தனி தீவுகளைப் போல சிதறுண்டு கிடக்கும் தமிழாராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்த திட்ட அறிக்கையை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்திடவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் அறிவியல் திறனை வளர்ப்பதற்கான நூல்களை பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள ஒரு வல்லுநர் குழு அமைப்பதென்றும், மொழிபெயர்ப்பு பயிற்சி அளித்திட தமிழ்ப் பல்கலைக் கழகம் திட்டம் வகுத்து செயல்படுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கு தனியாக தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடி ரூபாய் சிறப்பு நிதியத்தை விரைவில் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment