அடுத்த ஆண்டு 1500 – 2000 டேனிஸ் புத்தகங்கள் ஐ.பாட்டில் வருகின்றன..
உலகத்தின் வாசிப்புத் துறையில் பூமென ஒரு மாற்றம்..
டென்மார்க்கில் இப்போது ஐ.பாட் விற்பனைச் சந்தைக்கு வந்துவிட்டது. இதனுடைய வரவு எலக்ரோனிக் புத்தக வாசிப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 அலமாரிகளில் அடுக்கி வைக்கப்படக்கூடிய நூல்களை ஓர் ஏ-5 அளவு ஐ.பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். தற்போது டென்மார்க்கில் 7 வீதமான வாசகர்கள் எலக்ரோனிக் நூல்களை வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். ஐ.பாட் வரவு காரணமாக இந்தத் தொகை அடுத்த ஆண்டு 22 வீதமாக உயரப்போகிறது என்று கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விற்பனைக்கு வந்துள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐ.பாட் 5430 குறோணர்களுக்கு விற்கப்படுகிறது. மேலும் ஆறு மாதங்களில் இதன் விலை அரைப்பங்கு குறையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நூல் நிலையத்தையே கையில் தூக்கிக் கொண்டு மனிதர்கள் உலாவரும் காட்சிகளை இப்போதே ஐ.பாட் பாவனையாளரிடம் காணமுடிகிறது. அக்காலத்தே உமாபதிசிவாச்சாரியார் என்பவர் ஒரு வண்டிலில் ஏட்டுச் சுவடிகளை ஏற்றியபடி வலம் வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் இன்றோ பல பாரவண்டிகளில் ஏற்றக்கூடிய புத்தகங்களை ஒரு ஐ.பாட்டில் சுமந்து செல்ல முடியும்.
மேலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தை எரித்து ஓர் இலட்சம் புத்தகங்களை சிங்கள இராணுவம் எரித்ததாகக் கூறுவோர் இனி இராணுவத்தால் எரிக்க முடியாத ஐ.பாட்டுக்;கள் வந்துவிட்ட செய்தியை கொண்டாடலாம். டென்மார்க்கின் பிரபல புத்தக விற்பனை நிறுவனங்கள் தாம் அச்சிட்ட நூல்களை எல்லாம் இப்போது உடனடியாக எலக்ரோனிக் புத்தகங்களாக மாற்றும் பணியில் குதித்துள்ளன. அடுத்த ஆண்டு 1500 முதல் 2000 புத்தகங்கள் எலக்ரோனிக் புத்தகங்களாக்கப்பட்டு ஐ.பாட் வாசகர்களுக்கு வருகிறது.
மக்கள் நூல்நிலையங்களுக்கு வராமலே நூல் நிலையங்களில் உள்ள நூல்களை ஐ.பாட் மூலம் வாசிப்பதும் மக்கள் தொகை எலக்ரோனிக் வாசிப்பிற்குள் பூம் என்று சரிவதும் தமக்கு பெரும் ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருப்பதாக கொப்பன்கேகன் நூல்நிலைய அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
மேலும் புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கும்போது 25 வீத வரி கட்ட வேண்டியிருந்தது, எலக்ரோனிக் புத்தக மயமாகும்போது அந்த வரி இல்லாமலே புத்தகங்களை ஐ.பாட் மூலம் ரொச் சிஸ்ரத்தில் படிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் டென்மார்க் பாடசாலைகளில் உள்ள கரும்பலகைகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கணினித்திரைகள் கரும்பலகைகள் ஆகின்றன. அவற்றோடு இந்த ஐ.பாட்டும் இணையும்போது மாணவருக்கு கல்வி மிக நவீனமாக மாற்றமடையும். மேலும் பாடசாலை புத்தகங்களும் எலக்ரோனிக் வடிவமானால் மாணவர்கள் முதுகு முறிய புத்தகங்களை சுமாக்காமலே போக வாய்ப்புள்ளது.
தற்போது வெளிவந்துள்ள அதிசிறந்த அப்பிள் ஐ.பாட் பகலில் சிறிது தெளிவு குறைவாக இருக்கும். ஆனால் சிறிது இருட்டு இருந்தால் கத்திமுனைக் கூர்மை கொண்டதான படங்களும், வீடியோவும் கொண்டு காட்சி தருகிறது. உலகம் அதிவேகமான ஒரு பாய்ச்சலுக்குள் நுழைவதை ஐ.பாட்டின் வரவு காட்டுகிறது.
எவ்வளவுதான் எலக்ரோனிக் யுகம் வந்தாலும் புத்தகங்களில் இருந்து வாசிப்பது சுகம் என்று கூறுவோரும் பெருந்தொகையாக இருப்பதை மறுக்க இயலாது. ஆனால் புலம் பெயர் நாடுகளில் புத்தகங்களை அச்சடித்து சந்தைப்படுத்த முடியாத தமிழ் எழுத்தாளருக்கு உலகளாவிய சந்தையை ஐ.பாட் ஏற்படுத்தித் தரப்போகிறது. உலகம் இப்படியிருக்க பூசா முகாமிலும், புளியங்குளம் முகாமிலும் மக்களை அடைத்து வைத்துக் கொண்டும், பயங்கரவாதமென்றும் பக்கவாதமென்றும் கூச்சலிடும் சிறீலங்காவின் அவலத்தை நினைத்தால் ஐ.பாட்டும் ஒரு சொட்டு கண்ணீர்விடத்தான் செய்யும் என்றார் தமிழர் ஒருவர்.
0 comments:
Post a Comment