6.24.2010

மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய “அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.’

கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட “எஸ்.எம்.எஸ்’ தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் “வணக்கம்’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.

துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.

நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், “தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை’ என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment