6.29.2010

முடிந்துவிட்ட செம்மொழி மாநாடும் முடியாத கலைஞர் கனவும்

புலம் பெயர் தமிழரே அடுத்தகட்ட செம்மொழி மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்..
வாலி, வைரமுத்து, சாலமன் பாப்பையா, லியோனிக்கு அப்பால் தமிழை முன்னெடுக்க வேண்டும்

கோவையில் கடந்த 23 ம் திகதி ஆரம்பித்த செம்மொழி மாநாடு நேற்று 27ம் திகதியுடன் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. உலகமெல்லாம் பரவியிருக்கும் தமிழர்கள் புதுமாத்தளனுக்குப் பிறகு ஒன்றாக நோக்கிய ஓர் உன்னத நிகழ்வு. இது கலைஞரின் ஆட்சிக்காலத்து சாதனைகளில் மிகப்பெரிய சாதனை என்று பேராசிரியர் கா. சிவத்தம்பியே பாராட்டியுள்ளார்.

புகழ் மிக்க ஓர் அறிஞன் தமிழ் மொழிக்கு இன்னல் செய்ய நினைத்தால் அவன் அறிஞனல்ல அவனே மூடனாகும். அதுபோல ஒரு மூடன் தமிழ் மொழிக்கு இன்னல் செய்ய நினைக்காவிட்டால் அந்த மூடனே உண்மையான அறிஞனாவான் – இக்கருத்தை கவிதையாக பாடியவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனாகும்.

பாரதிதாசனின் கருத்துப்படி பார்த்தால் செம்மொழி மாநாடு என்பது தமிழுக்கு யாதொரு இன்னலும் விளைவிக்காத மாநாடாக அமைந்திருக்கிறது. ஆகவே அதைச் செய்தவர்கள் அறிஞர்கள் என்று பாராட்டப்பட வேண்டியவர்களே. எனவேதான் இப்படியான செயல்களுக்கு பகிஷ்கரிப்பு அறிக்கைகள் விட்டு, நாமாகவே முட்டாள்கள் அணிக்குள் போகக் கூடாது என்று முன்னர் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது.

இதுவரை கலைஞர் வெளியிட்ட செலவு விபரத்தைப் பார்த்தால் 500 கோடிகளை தாண்டிச் சென்றுள்ளது. ஆனால் நிஜமான செலவு இதைவிட பல மடங்கு அதிகமாக போயிருக்கும். தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்து, அதற்காக இவ்வளவு பெருந்தொகை பணத்தை செலவிட கலைஞரை விட்டால் வேறு தமிழ் தலைவர்கள் இப்போது உலகில் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. இது சாதாரண விடயமல்ல என்று கா.சிவத்தம்பி கூறியது மீண்டும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

அதே நேரத்தில் ஈழத்தில் நிலவிய தமிழ் தேசியத்தை அழிக்க இந்திய அரசு 9000 கோடிகளை சிங்கள அரசுக்குக் கொடுத்தது. அதேபோல சீனா, அமெரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகள் கொடுத்த பணத்தைக் கூட்டிப்பார்த்தால் தமிழை அழிப்பதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதை வாழவைக்க கலைஞர் செலவிட்ட பணம் மிகமிக சொற்பமானது என்பதையும் தாழ்மையுடன் தமிழினம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறது. எனினும் இப்போது அந்த ஒப்புமைகள் அவசியமல்ல. மாநாட்டின் முடிவில் ஈழத் தமிழருக்கு ஒரு நலவாழ்வு வேண்டுமென்ற அறிவிப்பை கலைஞர் விடுத்து மாநாட்டை நிறைவடைய செய்துள்ளார், அதற்காக கலைஞருக்கு நன்றிகள்.

அதேவேளை செம்மொழி மாநாடு நடாத்தப்பட்ட விதமும், அதில் பங்கேற்ற அறிஞர்கள் முன் வைத்த கருத்துக்களும் தமிழ் இனத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியிருப்பதை மறுக்க முடியாது. தமிழ் மொழியில் கற்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, தமிழ் வளர்ச்சிக்கு 100 கோடிகள், செம்மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை செம்மொழி மாநாடு நடாத்தப்படும் என்று கலைஞரால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மிக நல்லவை. அரைகுறை ஆங்கிலத்தில் அழிந்து கிடக்கும் தமிழக தமிழருக்கு ஒரு விழிப்பை ஏற்படுத்த இது கண்டிப்பாக அவசியமாகும்.

செம்மொழி மாநாடு நடாத்தப்பட்ட விதம், அதன் கருதுகோள்கள் போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஏறத்தாழ தமிழகத்தில் நடைபெற்ற 2 வது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளின் சாராம்சமே நினைவிற்கு வருகிறது. தமிழ் என்றால் வள்ளுவரில் இருந்து, பாரதிவரை புலவர்களுக்கான ஊர்திகள் பவனி வருவது, மாளிகைகள் போல அரங்கங்கங்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெறுவது, அங்கே பல அறிஞரும் வந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது, பின் இனிய தமிழ் நினைவுகளுடன் பிரிந்து செல்வது என்ற அதே கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே செம்மொழி மாநாட்டின் தோற்றம் தெரிகிறது. தமிழ் என்றால் சேர சோழ, பாண்டியர் காலத்தில் இருக்கிற சாமான் என்ற கருத்தே தொனித்து நிற்கிறது.

<

பராசக்தி திரைப்படத்தில் வழக்கு மன்ற வசனத்தை எழுதிய கலைஞர் இப்போதும் பராசக்தி காலத்து வழக்கு மன்ற படங்களை வர்ணத்தில் எடுத்து வருகிறார். அதுபோல முன்னைய தமிழாராய்ச்சி மாநாட்டு சிந்தனைகளில் ஏற்பட்ட ஒரு பிரமாண்டமாக செம்மொழி மாநாடு இருந்தது. முன்னர் சிறுமியாக இருந்த டைனசோர் ஒன்று இப்போது முதிய டைனசோராக நடந்தது போல தோற்றப்பாடு காணப்பட்டது. செம்மொழி மாநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு தமிழாராய்ச்சி மாநாட்டில் இருந்து மாற்றம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியம். அதேவேளை இணைய மாநாடும் இடம் பெற்றதுதானே என்று ஆறுதல் கூறப்பட்டாலும், செயலில் அதன் பெறுபேறுகள் என்ன என்பது இதுவரை வெளியில் தெரியவில்லை.

கவியரங்கத்தில் வாலி பாடிய கவிதை இரண்டு ஐயராத்து அம்மாக்களையும், சுப்பிரமணிய சாமி, சோ போன்றவர்களை கேலி செய்வதாக அமைந்திருந்தது. அந்தக் கவிதையை தமிழக ஊடகங்கள் சாதனை போல பிரச்சாரம் செய்தன. செம்மொழி மாநாட்டில் பாடவேண்டிய செம்மார்ந்த கவிதையா அது என்பது கலைஞருக்கு முன் வைக்கப்பட வேண்டிய கேள்வி. அதேபோல யாரை எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பாராட்டுவதையே தம் முதல் வேலையாக செய்தார்கள். கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர்தான், ஆனால் எல்லோரும் கலைஞரை பாராட்டினால் அது தற்புகழ்ச்சியாக அமைந்துவிடும். தி.மு.க கொடிகள் இடம் பெறக்கூடாது என்று தடுத்த கலைஞர் கண்டிப்பாக இப்படியான நாணம் தரும் பாராட்டுக்களையும் நிறுத்தும்படி கட்டளையிட்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாட்டை நடாத்தியமைக்காக கலைஞரை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பது தெரியாமல் இவர்கள் நடந்துள்ளார்கள்.

செம்மொழி மாநாடு முடிந்த பின்னர் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறிய கலைஞர் இப்போது அப்படி நான் கூறவே இல்லை என்று அறுதியாகக் கூறிவிட்டார். இனியவை நாற்பதிற்கு அரங்கு வைத்த கலைஞர் தானே அதைக் கடைப்பிடிக்கவில்லையே என்று மற்றவர் எண்ணும்படி நடத்தல் கூடாது. சங்கப்பலகை என்பது தகுதி உள்ளவர்களுக்கே இடம் கொடுக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளானாலும் அவர்களில் கற்றவனே முன் வரவேண்டும் என்று புறநானூறு கூறும். கலைஞர் தனது பிள்ளைகளையும், குடும்பத்தவரையும், பேரப்பிள்ளைகளையும், வேண்டியவர்களையும் முன்னணியில் உட்கார வைத்து, செம்மொழிக்கே உரிய சங்கப்பலகையின் பெருமையை சரித்துவிட்டார் என்று அவருடைய எதிரிகள் குறைகூற இடம் விட்டிருக்கக் கூடாது.

அதேவேளை கலைஞருக்கு வேண்டிய அனைவரும் மேடைக்கு முன் வந்து அலங்கார பூஜிதைகளாக காட்சி தரக்கூடாது என்பதை தாமாக உணர்ந்திருக்க வேண்டும். அதுவே அவர்கள் கலைஞருக்கு தரும் மரியாதையாகும். அதேவேளை கலைஞர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தும் சோனியாகாந்தி வரவில்லை என்பதை நாம் அவதானிக்காமல் இருக்க முடியாது. தமிழுக்கான இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கலைஞர் கூறியிருப்பதன் ஆழமும், சிரமமும் நமக்கும் புரிகிறது.

யார் எங்கே எப்போது, எப்படி கவிழப்பார்கள் என்று தெரியாத கூட்டத்திற்குள் கலைஞர் பயணிக்கிறார், அதுபோல எங்கே எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பார் என்று சொல்ல முடியாத ஒருவராகவும் அவர் இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. ஆகவே அனைவரையும் தவிர்த்து கலைஞர் மீது தனியாக ஒரு விமர்சனம் வைக்க இங்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது.

அன்று வட இந்தியாவின் பாடலிபுரத்தில் புத்த சமயத்திற்கு அசோகச் சக்கரவர்த்தி இதுபோல ஒரு மாநாட்டை நடாத்தினார். புத்தசமயத்தை இந்தியாவிற்கு வெளியால் எடுத்துச் சென்று நிலைநாட்டுவேன் என்று முடிவு செய்தார். ஒரேயொரு மாநாடு, புத்தசமயத்தை இன்றுவரை காப்பாற்றி நிற்கிறது. இதை செம்மொழி மாநாடு உணர வேண்டும். சாம்ராட் அசோகன் நாடகத்தை அன்னையின் ஆணை படத்தில் எழுதிய கலைஞராவது உணர வேண்டும்.

கலைஞரின் செம்மொழி மாநாட்டின் அடுத்த கட்டத்தை புலம் பெயர் தமிழர்தான் முன்னெடுக்க வேண்டும். அமெரிக்க, சீன, இங்கிலாந்து, அதிபர்கள் போன்ற உயர்மட்ட தலைவர்கள் முதல், கேம்பிறிட்ஜ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் முதல் கொண்டு உலக அறிஞரையும், தமிழரையும் தமிழுக்காக ஒன்று கூட்டவேண்டும். சாலமன் பாப்பையா, லியோனி பட்டிமன்றமும், வாலி, வைரமுத்து கவியரங்கமும் அல்ல அடுத்த கட்ட தமிழ் வளர்ச்சி என்பதை புலம் பெயர் தமிழர் கலைஞருக்கு புரிய வைக்க வேண்டும்.

முன்னர் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வையும் அதை நடாத்திய முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, இதனால் அடையக் கூடிய அடுத்தகட்ட பயனை நீங்கள் புரிந்துள்ளீர்களா என்று கேட்டபோது அவர்களால் உரிய பதிலைக் கூற முடியாதிருந்தது. ரஸ்யாவில் பொங்கு தமிழ் போல மக்களை ஒன்றிணைத்து, பொறிஸ் யெல்ஸ்ரின் சர்வாதிகார ஆட்சி ஏற்படாமல் தடுத்தது போல நீங்களும் தடுக்க ஏதாவது திட்டமிருக்கிறதா என்று கேட்டபோது அவர்களிடம் பதில் இருக்கவில்லை. பொறிஸ்யெல்ஸ்ரினின் வேலைத்திட்டம் போல பொங்குதமிழை மாற்றி புதுமை பெற செய்ய தங்களால் முடியாத நிலை இருப்பதாகவும், அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்கள். அவர்கள் அதைப் புரிந்திருந்தால் புதுமாத்தளன் வந்திருக்காது, ஈழப் பிரச்சனை என்றோ முடிந்திருக்கும். ஆயுதங்களால் செய்ய முடியாததை தமிழ் உணர்வால் செய்யலாம் என்பதை இன்றுவரை நாம் புரியவில்லை.

இதுபோல செம்மொழி மாநாட்டின் ஒன்றுபட்ட பலத்தை இணைத்து அடுத்த கட்டத்திற்குள் போவதற்கும் உரிய வேலைத்திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இப்படியான மநாடுகளை கூடுவதும், அவற்றை நடாத்தினோமென பட்டியலிடுவதுமல்ல நமது சாதனை. அதனால் தமிழுக்கான உறுதியான இலக்கு எட்டப்பட என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும்.

புலம் பெயர் தமிழன் என்று ஒருவன் இருந்தான், தமிழை உலகமெல்லாம் வாழும் மொழியாக காவிச் சென்றான். உலகத்தில் ஒவ்வொரு நாடுகளில் இருந்து ஒவ்வொரு தமிழனாவது பிரதிநிதியாக இடம் பெற்றிருக்க வேண்டும். உலகத்தமிழ் பிரதிநிதிகள் என்று ஓர் உலக அரங்கு அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அதையெல்லாம் செம்மொழி மாநாட்டால் செய்ய முடியவில்லை. உலக நாடுகள் தோறும் தனித்தனி அமர்வுகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என்று எத்தனையோ எழுதத்துடிக்கிறது மனம். தமிழுக்காக சென்ற ஆண்டு 50.000 பேர் உயிர் கொடுத்தார்கள் அவர்களைப்பற்றி ஒருவார்த்தை இல்லாமல் முடிந்தது செம்மொழி மாநாடு என்ற கவலையும் நமக்குண்டு.

ஆனாலும் இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு செம்மொழி மாநாடு அடிப்படையாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. அது இல்லையென்றால் இப்படியான சிந்தனைகளும் இல்லாமலே போயிருக்கும். ஆகவே பல்வேறு குறை நிறைகள் இருந்தாலும், செம்மொழி மாநாட்டை இவ்வளவு சிறப்பாக நடத்தியமைக்காக கலைஞரை பாராட்ட வேண்டியது உலகத் தமிழர் கடமையாகும். மற்றவர்கள் கலைஞர் செய்ததை செய்யவில்லை என்பதை நினைத்தால் அவரைப் பாராட்டுவதில் தப்பில்லை என்பதையும் உணரலாம்.

0 comments:

Post a Comment