8.10.2010

செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்.


செல்பேசி நிறுவனங்கள் அமைக்கும் தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு (Electro Magnetic Radiation - EMR) நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் ஒரு கோபுரத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் தகவல் தொடர்பு மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கோபுரத்திற்கும் அளிக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த அளவை மீறக் கூடாது என்று தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

கதிர்வீச்சு தொடர்பான பன்னாட்டு பாதுகாப்பு அமைப்பு செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவை எல்லா செல்பேசி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறிய அமைச்சர் சச்சின் பைலட், ஒவ்வொரு தகவல் ஒலிப்பரப்பு கோபுரமும் (Base Trans-receiver Station - BTS) எந்த அளவிற்கு மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு வெளியாக்குகிறது என்பது தொடர்பான சான்றிதழ் பெற்று, அதனை தொலைத் தொடர்புத் துறையின் கண்காணிப்பு பிரிவிற்கு அளித்திட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொலைத் தொடர்பு கோபுரமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அந்த கோபுரங்களில் இருந்து மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு வெளியாகிறதா என்பது உறுதிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு செல்பேசி தொலைத் தொடர்பு கோபுரமும் வெளியிடும் கதிர் வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமானால், கோபுரத்திற்கு ரூ.5 லட்சம் அபாரம் விதிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பைலட், இது குறித்து உறுப்பினர்கள் பெரிதாக அச்சப்பட வேண்டாம் என்றும், அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக் கதிர் வீச்சிற்கும் புற்று நோயை உண்டாக்கும் கட்டிகள் உருவாவதற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ள உலக பொது நல அமைப்பு (WHO), அடுத்த 20 ஆண்டுகளில் உடல் நலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு இருக்கும் என்று எச்சரித்துள்ளதை அமைச்சர் பைலட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல செல்பேசி நிறுவனங்கள் தங்களின் சேவை 'சிறந்ததாக விளங்க' இந்த மின்காந்த ஒலிக்கதிர் வீச்சை அதிகப்படுத்துகின்றன என்றும், அதன் காரணமாகவே செல்பேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்துவோருக்கு காதைச் சுற்றி மறத்துவிட்டது போன்று உணர்வதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பான எச்சரிக்கைகள் குறுஞ்செய்தி மூலம் உலா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment