9.26.2010

7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் : மும்பை பேராசிரியர் தகவல்

நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் என மும்பை ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் ‘நானோ எலக்ட்ரோனிக்ஸ்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்திருந்த போதே பேராசிரியர் ராம்கோபால் ராவ் மேற்கண்ட தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

தற்போதுள்ள கருவிகளை வைத்து நெஞ்சு வலி வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பதை அறிய 4 மணி நேரம் ஆகிறது.

ஆனால் ‘நானோ’ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய ‘சிப்பை’ப் பொருத்திய கருவி மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பை கண்டறிந்து விடலாம். மும்பை ஐஐடி உதவியுடன் இக்கருவியை நாம் வடிவமைத்துள்ளோம்.

தற்போது இது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அரசு அனுமதியோடு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்கருவிப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு ‘ஐசென்ஸ்’ எனப் பெயர் வைத்துள்ளோம். இதன் விலை ரூ.10 ஆயிரத்து மேல் இருக்காது. கருவியைத் தயாரிக்க தனி நிறுவனம் தொடங்கப்படும்.

மத்திய அரசு நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டில் 5 இடங்களில் தலா ரூ.50 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். முதன்முறையாக மும்பை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இதுவரை 35 ஆராய்ச்சித் திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை சமர்ப்பிப்போருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஐஐடி ஏற்கிறது” என்றார்.

0 comments:

Post a Comment