Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

11.23.2010

ஐ பாட் அந்தக் காலத்து சிலேட்டின் நவீன வடிவம்.

அடுத்த ஆண்டு 1500 – 2000 டேனிஸ் புத்தகங்கள் ஐ.பாட்டில் வருகின்றன..
உலகத்தின் வாசிப்புத் துறையில் பூமென ஒரு மாற்றம்..

டென்மார்க்கில் இப்போது ஐ.பாட் விற்பனைச் சந்தைக்கு வந்துவிட்டது. இதனுடைய வரவு எலக்ரோனிக் புத்தக வாசிப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 அலமாரிகளில் அடுக்கி வைக்கப்படக்கூடிய நூல்களை ஓர் ஏ-5 அளவு ஐ.பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். தற்போது டென்மார்க்கில் 7 வீதமான வாசகர்கள் எலக்ரோனிக் நூல்களை வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். ஐ.பாட் வரவு காரணமாக இந்தத் தொகை அடுத்த ஆண்டு 22 வீதமாக உயரப்போகிறது என்று கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐ.பாட் 5430 குறோணர்களுக்கு விற்கப்படுகிறது. மேலும் ஆறு மாதங்களில் இதன் விலை அரைப்பங்கு குறையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நூல் நிலையத்தையே கையில் தூக்கிக் கொண்டு மனிதர்கள் உலாவரும் காட்சிகளை இப்போதே ஐ.பாட் பாவனையாளரிடம் காணமுடிகிறது. அக்காலத்தே உமாபதிசிவாச்சாரியார் என்பவர் ஒரு வண்டிலில் ஏட்டுச் சுவடிகளை ஏற்றியபடி வலம் வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் இன்றோ பல பாரவண்டிகளில் ஏற்றக்கூடிய புத்தகங்களை ஒரு ஐ.பாட்டில் சுமந்து செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தை எரித்து ஓர் இலட்சம் புத்தகங்களை சிங்கள இராணுவம் எரித்ததாகக் கூறுவோர் இனி இராணுவத்தால் எரிக்க முடியாத ஐ.பாட்டுக்;கள் வந்துவிட்ட செய்தியை கொண்டாடலாம். டென்மார்க்கின் பிரபல புத்தக விற்பனை நிறுவனங்கள் தாம் அச்சிட்ட நூல்களை எல்லாம் இப்போது உடனடியாக எலக்ரோனிக் புத்தகங்களாக மாற்றும் பணியில் குதித்துள்ளன. அடுத்த ஆண்டு 1500 முதல் 2000 புத்தகங்கள் எலக்ரோனிக் புத்தகங்களாக்கப்பட்டு ஐ.பாட் வாசகர்களுக்கு வருகிறது.

மக்கள் நூல்நிலையங்களுக்கு வராமலே நூல் நிலையங்களில் உள்ள நூல்களை ஐ.பாட் மூலம் வாசிப்பதும் மக்கள் தொகை எலக்ரோனிக் வாசிப்பிற்குள் பூம் என்று சரிவதும் தமக்கு பெரும் ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருப்பதாக கொப்பன்கேகன் நூல்நிலைய அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.


மேலும் புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கும்போது 25 வீத வரி கட்ட வேண்டியிருந்தது, எலக்ரோனிக் புத்தக மயமாகும்போது அந்த வரி இல்லாமலே புத்தகங்களை ஐ.பாட் மூலம் ரொச் சிஸ்ரத்தில் படிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் டென்மார்க் பாடசாலைகளில் உள்ள கரும்பலகைகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கணினித்திரைகள் கரும்பலகைகள் ஆகின்றன. அவற்றோடு இந்த ஐ.பாட்டும் இணையும்போது மாணவருக்கு கல்வி மிக நவீனமாக மாற்றமடையும். மேலும் பாடசாலை புத்தகங்களும் எலக்ரோனிக் வடிவமானால் மாணவர்கள் முதுகு முறிய புத்தகங்களை சுமாக்காமலே போக வாய்ப்புள்ளது.

தற்போது வெளிவந்துள்ள அதிசிறந்த அப்பிள் ஐ.பாட் பகலில் சிறிது தெளிவு குறைவாக இருக்கும். ஆனால் சிறிது இருட்டு இருந்தால் கத்திமுனைக் கூர்மை கொண்டதான படங்களும், வீடியோவும் கொண்டு காட்சி தருகிறது. உலகம் அதிவேகமான ஒரு பாய்ச்சலுக்குள் நுழைவதை ஐ.பாட்டின் வரவு காட்டுகிறது.

எவ்வளவுதான் எலக்ரோனிக் யுகம் வந்தாலும் புத்தகங்களில் இருந்து வாசிப்பது சுகம் என்று கூறுவோரும் பெருந்தொகையாக இருப்பதை மறுக்க இயலாது. ஆனால் புலம் பெயர் நாடுகளில் புத்தகங்களை அச்சடித்து சந்தைப்படுத்த முடியாத தமிழ் எழுத்தாளருக்கு உலகளாவிய சந்தையை ஐ.பாட் ஏற்படுத்தித் தரப்போகிறது. உலகம் இப்படியிருக்க பூசா முகாமிலும், புளியங்குளம் முகாமிலும் மக்களை அடைத்து வைத்துக் கொண்டும், பயங்கரவாதமென்றும் பக்கவாதமென்றும் கூச்சலிடும் சிறீலங்காவின் அவலத்தை நினைத்தால் ஐ.பாட்டும் ஒரு சொட்டு கண்ணீர்விடத்தான் செய்யும் என்றார் தமிழர் ஒருவர்.

9.26.2010

7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் : மும்பை பேராசிரியர் தகவல்

நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் என மும்பை ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் ‘நானோ எலக்ட்ரோனிக்ஸ்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்திருந்த போதே பேராசிரியர் ராம்கோபால் ராவ் மேற்கண்ட தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

தற்போதுள்ள கருவிகளை வைத்து நெஞ்சு வலி வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பதை அறிய 4 மணி நேரம் ஆகிறது.

ஆனால் ‘நானோ’ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய ‘சிப்பை’ப் பொருத்திய கருவி மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பை கண்டறிந்து விடலாம். மும்பை ஐஐடி உதவியுடன் இக்கருவியை நாம் வடிவமைத்துள்ளோம்.

தற்போது இது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அரசு அனுமதியோடு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்கருவிப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு ‘ஐசென்ஸ்’ எனப் பெயர் வைத்துள்ளோம். இதன் விலை ரூ.10 ஆயிரத்து மேல் இருக்காது. கருவியைத் தயாரிக்க தனி நிறுவனம் தொடங்கப்படும்.

மத்திய அரசு நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டில் 5 இடங்களில் தலா ரூ.50 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். முதன்முறையாக மும்பை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இதுவரை 35 ஆராய்ச்சித் திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை சமர்ப்பிப்போருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஐஐடி ஏற்கிறது” என்றார்.

7.08.2010

சூரிய சக்தியில் வானமே வசப்பட்டது

சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியில் இயங்கும் விமானம் ஒன்று சரித்திரத்தில் இல்லாத வகையில் இரவு நேரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

பரிசோதனைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த விமானம் சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி இடைவிடாது ஒரு நாள் முழுக்கப் பறந்துள்ளது.

ராட்சத பலூனில் பறந்து உலகை வலம் வந்த முதல் நபர் என்ற பெருமைக்குரிய சுவிட்சர்லாந்தின் சாகச ஆர்வலர் பெர்த்ராண்ட் பிக்கார்த்தின் சிந்தனையில் உருவானது சோலார் இம்பல்ஸ் என்ற இந்த விமானம்.

ஒரு ஆள் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு இலகுரக விமானம் இது.

கார்பன் ஃபைபர் எனப்படும் கரி இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை என்னவோ ஒரு காருடைய எடைதான் என்றாலும், இதனுடைய இறக்கைகள் ஒரு ஜம்போ ஜெட் விமானத்தின் அளவுக்கு அறுபது மீட்டர்கள் நீளமுடையவை.

இந்த இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை உருவாக்குகின்ற சோலார் செல்கள் பன்னிரண்டாயிரம் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தன.

இந்த விமானத்தில் ஒரேயொருவர் மட்டுமே செல்ல முடியும், இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர்கள்தான், இந்த விமான இயந்திரத்தின் வலு ஒரு சிறிய ஸ்கூட்டருக்கு உரியதுதான் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்தில் இதனனைக் கொண்டு உடனடியாக பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப் போவதில்லை எனத் தெரிகிறது.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத சக்திகளைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு தன்னுடைய இந்த விமானம் ஒரு எட்டுத்துக்காட்டு என்று விமானத்தை உருவாக்கிய பெர்த்ராண்ட் பிக்கார்ட் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

விமானங்கள் இயங்குசக்தியைப் பெறுவதில் எதிர்காலத்தில் மாபெரும் திருப்புமுனையை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும், ஆகவே விமானங்களின் சரித்திரத்திலே ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் இது என்று கூறப்படுகிறது.

7.01.2010

அழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்கக்கூடிய தக்காளி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அதிக நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடிய புதிய தக்காளி இனத்தை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சாதாரண தக்காளி இனத்தில், ஈஸ்ட் எனப்படும் பூஞ்சையின் ஜீனைக் கலப்பினம் செய்து அவர்கள் இந்தச் சாதனையை புரிந்துள்ளனர்.

இதன்மூலம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் தக்காளியை விட ஒருவார காலத்துக்கும் மேல் இந்த வகை தக்காளிகள் கெடாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அவதார் ஹன்டா தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இது குறித்து ஹன்டா கூறியிருப்பதாவது:

பல்வேறு உணவுப் பொருள்களின் கெட்டுப் போகும் தன்மையைக் குறைத்து, நீண்ட நாள்கள் சேமித்து வைக்க இந்த கண்டுபிடிப்பு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். கடைகளில் தக்காளியை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களுக்கு இது நல்லதொரு பயனாக அமையும் என ஹன்டா தெரிவித்துள்ளதாக தாவரவியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

6.21.2010

4 ஆண்டுக்குப் பின் அதிசயம்: தாய், மகனை இணைத்தது பேஸ்புக் இணையதளம்

சமூக இணையதளமான பேஸ்புக், பொழுதை போக்குவதற்கானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகளை செய்து வருகிறது. ஆம், 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய், மகனை மீண்டும் இணைத்துள்ளது பேஸ்புக்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜோசப் வகுவெரா, லொரெனா பெரஸ் தம்பதி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2006ம் ஆண்டில் மனைவியை விட்டு பிரிந்து விட்டார் ஜோசப். உடன் மனைவியின் அனுமதியின்றி மகன் இசையா ஜெரமையா வகுவெராவையும் அழைத்துச் சென்று விட்டார். எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனது மகனை காணவில்லை என கணவர் மற்றும் மகன் போட்டோவுடன் பேஸ்புக்கில் பெரஸ் விளம்பரப்படுத்தி இருந்தார்.

இதைப் பார்த்த ஜோசப்பின் முன்னாள் காதலி, இசையா இருப்பிடம் குறித்து போலிசில் தகவல் கொடுத்தார். போலிசார் உதவியுடன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் இசையாவை பெரஸ் கண்டுபிடித்தார். ‘‘மகனை சந்தித்தபோது ஆனந்த கண்ணீர் விட்டேன். அவன் என்னை கட்டித் தழுவி, அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என்றான்’’ என பெரஸ் தெரிவித்தார்.தாயையும் மகனையும் சேர்த்து வைப்பதற்கு உதவிய ஹாரிஸ் பகுதி மாவட்ட வழக்கறிஞர், கூறுகையில், ‘‘தம்பதிக்குள் ஏற்படும் பிரச்னையில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிரிக்கக்கூடாது’’ என்றார்.

6.20.2010

350 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர்

ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

அதன் வடக்கு துருவத்தில், அட்லாண்டிக் கடல் அளவு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய்க் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

தவிர, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கைகோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.

செவ்வாய்க்கிரகத்தில் 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிருத்வி&2 ஏவுகணை சோதனை முழு வெற்றி

ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய பிருத்வி&2 அணு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதில், பிருத்வி ரக ஏவுகணையும் ஒன்று. இதன் வரிசையில் பிருத்வி &2 ஏவுகணை தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் வல்லமை படைத்த இது, ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் உள்ள ஓருங்கிணைந்த சோதனை வளாகத்தில் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் இதை பார்வையிட்டனர். இந்த ஏவுகணையில் 500 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை பொருத்தி தாக்க முடியும். இதை 1000 கிலோவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களில் 4வது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டு இருப்பதால், விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்வி&2 உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிப்பு, அணுகுண்டை தூக்கிச் செல்லும் திறன், இலக்கை துல்லியமாக தாக்கும். ஒரிசா மாநிலம் பாலசூர் கடற்கரை அருகே சாண்டிப்பூரில் வெற்றிகரமாக சோதனை. 500 கிலோ எடையை தூக்கிச் செல்லும்.