6.25.2010

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் கே ஆர்ஜி மோதுகிறார்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனும், கே.ஆர்.ஜியும் மோதுகிறார்கள்.

இதற்கான வேட்பு மனுவை கே ஆர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜுலை) 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜுலை 11-ந் தேதி ஓட்டுப்பதிவு.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனை எதிர்த்து, கே.ஆர்.ஜி. போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் கே.ஆர்.ஜி. தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். முதலில் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணமில்லை என்று கூறிவந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது 3-வது முறையாக இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து ராம நாராயணன் கூறுகையில், “ஒட்டு மொத்த திரையுலகின் நலன் கருதியும், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த முறையும் தேர்தலில் நிற்கிறேன். என்னைப் பற்றி கவுன்சில் உறுப்பினர்களுக்குத் தெரியும்…” என்றார்.

சிறு படத் தயாரிப்பாளர்களுக்காக…

தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேஆர்ஜி கூறுகையில், “பதவி ஆசையால் நான் போட்டியிடவில்லை. சிறிய படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற இப்போது களமிறங்குவது முக்கியமானதாக உள்ளது” என்றார்.

0 comments:

Post a Comment